பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரில் நடைபெற்ற 17வது பாராலிம்பிக் பாராலிம்பிக் போட்டிகள் நேற்று இரவு கண்கவர் நிகழ்ச்சிகள் மற்றும் அற்புதமான சாகசங்களுடன் நிறைவடைந்தது. 170 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் 22 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்தது. பதக்கம் வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை வென்றிருந்தது. வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இம்முறை அந்த எண்ணிக்கையை இந்திய வீரர்கள் முறியடித்து மொத்தம் 29 பதக்கங்களை வென்றனர்.
இந்திய பாராலிம்பியன்ஸ் 7 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணி பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய வீரர்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்று வீரர்களை பாராட்டினார்.
பாரா ஸ்போர்ட்ஸில் நமது நாடு முன்னேறி வருகிறது.கடந்த பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்றுள்ளோம், தற்போது 29 பதக்கங்களை வென்றுள்ளோம்.அடுத்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
Discussion about this post