இந்தியா ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா., பொதுச் சபையில் நடந்த எதிர்கால உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மனிதநேயம் சார்ந்த அணுகுமுறைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதன் மூலம் இந்தியா நிலையான வளர்ச்சியை நிரூபித்துள்ளது என்றார். வெற்றி என்பது நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என்றும் போர்க்களத்தில் அல்ல என்றும் அவர் கூறினார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மறுபுறம் சைபர்ஸ்பேஸ், கடல்வெளி, வான்வெளி போன்றவை புதிய மோதல் களமாக உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கு உலக அளவில் சமநிலையான கட்டுப்பாடு தேவை என்று கூறிய பிரதமர் மோடி, உலக நலனுக்காக இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post