“நான் தமிழ்நாட்டு பாணியில் பேசினால் நல்லா இருக்காது” பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோபம்
“நான் தமிழ்நாட்டு பாணியில் பேசினால் நல்லா இருக்காது. இது விவாதத்திற்குரிய இடம் அல்ல” என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமாக கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். அப்போது பேசிய எல்.முருகன், “மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரிக்கு ரூ.3,432 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல், ஜிப்மருக்கு ரூ.1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.150 கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வழங்கப்படும்.
விவசாயிகளின் கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 16 ஆயிரம் விவசாயிகள் இதைப் பெறலாம். குடிநீர் மேலாண்மை திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.12 லட்சம் வரி செலுத்த வேண்டியதில்லை.
தமிழ்நாட்டில், 2014க்கு முன்பு ரயில்வேக்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு, ரூ.6000 கோடி ஒதுக்குகிறோம். புதிய ரயில் பாதையை ஒதுக்குகிறோம். கன்னியாகுமரி உட்பட பல ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழக அரசு ஒத்துழைத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்” என்றார்.
அப்போது, செய்தியாளர்கள், புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் இருக்கும்போது மத்திய அரசு ஏன் தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், புதுச்சேரியில் நிதி நெருக்கடி இருப்பதாக முதல்வர் ரங்கசாமி கூறியதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த எல்.முருகன், “புதுச்சேரியில் நிதி நெருக்கடி இல்லை. ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கோரிய நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்கி வருகிறோம். நாங்கள் பாகுபாடு இல்லாமல் நிதி வழங்கி வருகிறோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்தும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். இது மக்களுக்கு பயனுள்ள பட்ஜெட்.”
புதுச்சேரியின் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், “பட்ஜெட்டின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். புதுச்சேரிக்கு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கியுள்ளோம். தேவைகள் இருந்தால், ஆளுநர் மற்றும் முதல்வரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய எல்.முருகன், “நான் தமிழக பாணியில் பேச ஆரம்பித்தால், அது நல்லதல்ல. இது விவாதத்திற்குரிய இடம் அல்ல. வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் கொடுத்துள்ளோம், அதை வரவேற்க வேண்டும்” என்று கூறிவிட்டு உடனடியாக வெளியேறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பாதியிலேயே வெளியேறினார், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.