2021 – 2022 க்கான பமகயின் விவசாய நிழல் நிதி அறிக்கை இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.
இதன் முக்கிய அம்சங்கள்:
“1. தமிழகத்தில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பாமக தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடப்பாண்டு முதல் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போவதாக தமிழக அரசு ஆளுநர் உரையில் அறிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் நடப்பாண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை கூடுதல் கவனத்துடன் பாமக தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
2. பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. 2021 – 22 ஆம் ஆண்டை வேளாண்மை மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, அதை மையக்கருவாகக் கொண்டு இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
வேளாண் கட்டமைப்பு மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்புக்கான ஏராளமான புதிய திட்டங்கள் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
3. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.
4. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்படும்.
5. கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5,000 நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.
6. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
7. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
8. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.
9. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.
10. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.
11. தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
வேளாண் கல்வி – 3 புதிய பல்கலைக்கழகங்கள்
12. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக்கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி
13. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவும்.
14. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2-வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.
15. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.
16. வேளாண் துறைக்கு 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.47,750 கோடி நிதி ஒதுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இது 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11,982.71 கோடியுடன் ஒப்பிடும்போது, சுமார் 4 மடங்கு அதிகம்.
17. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,100 கோடி விவசாயிகள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
18. நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி செலவிடப்படும்.
19. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.7,000 கோடி செலவிடப்படும்.
20. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.13,650 கோடி செலவிடப்படும்.
50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
21. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
22. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
23. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
24. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரூ.36,000 வரை மூலதன மானியம்
25. தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000 மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.
26. 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் அடையாள உதவியாக ரூ.20,000 வழங்கப்படும்.
27. கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்த விவசாயிகளின் பயிர்க்கடனை ஈடுகட்டுவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5,000 கோடி தவிர மீதமுள்ள ரூ.7,110 கோடியும் நடப்பாண்டுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்தொகைக்கான வட்டியாக ரூ.248.85 கோடி கூடுதலாக அரசு வழங்கும்.
28. நடப்பாண்டில் ரூ.14,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
29. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. அதுமட்டுமின்றி, தவணை தவறாமல் கடனை செலுத்தும் உழவர்களுக்கு 10%, அதிகபட்சமாக ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.
பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி
30. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.12,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 3 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.
கரும்பு சாகுபடிக்கு புத்துயிரூட்டும் திட்டம்
31. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2020 – 21 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 6.52 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
32. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.
33. சர்க்கரை ஆலைகளின் பிற கடன்களை சமாளிப்பதற்காக அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன் பெற்றுத்தரும்.
34. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட, மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.
சிறப்புத் திட்டம்
35. வேளாண்மையை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
36. மழை, வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, அவற்றுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க நிரந்தர தீர்வுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வகை செய்யப்படும்.
37. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000, கரும்புக்கு ரூ.90,000, நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
38. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
காலநிலை மாற்ற அவசரநிலை
39. காலநிலை மாற்ற அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சமாளிப்பதற்கான செயல்திட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படும்.
40. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக திறன்மிகு வேளாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
41. காலநிலைக்கு ஏற்ற திறன்மிகு வேளாண்மை முறையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்காக வேளாண்மை, சுற்றுச்சூழல், வருவாய், நிதி ஆகிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.
வேளாண் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம்
42. விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் விளையும் அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் மாநில அரசே விலை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.
43. வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தில் மாநில நிதித்துறை, வேளாண்துறை, உணவுத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
44. பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அத்துடன் 50 விழுக்காடு லாபம் சேர்த்து, கொள்முதல் விலையை விளைபொருள் விலைநிர்ணய ஆணையம் தீர்மானிக்கும்.
வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம்
45. தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வகை உணவு தானியங்களுக்கான கொள்முதல் விலையை மாநில அரசே நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
46. 2021-22 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.3,000 என நிர்ணயிக்கப்படும்.
47. வேளாண் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன், ஆண்டுக்கு 6% வேளாண் வளர்ச்சியை எட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குழு பரிந்துரைக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.
48. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.
49. வேளாண் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் சிறிய பங்கு வழங்கப்படும். மீதமுள்ள ஊதியத்தை அரசு வழங்கும்.
50. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதன் மூலம், கோடைக்காலங்களிலும் விவசாயம் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் புரட்சிகரமான நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
51. இதற்காக அனைத்து சிற்றாறுகள் மற்றும் ஓடைகளை அரை கிலோமீட்டருக்கு ஒரு சிறிய தடுப்பணை அமைத்து, அவற்றில் 200 அடி ஆழத்திற்கு நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்படும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடைக்கால சாகுபடிக்கு உதவியாக இருக்கும்.
காவிரி & கோதாவரி இணைப்பு – விரிவான திட்ட அறிக்கை தயார்
52. தமிழகத்தின் நீர்ப்பாசன கட்டமைப்பு வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய காவிரி – கோதாவரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
53. காவிரி – கோதாவரி இணைப்புக்குத் தேவையான பிற அனுமதிகள் பெறப்பட்டு, 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும்.
54. மேட்டூர் உபரிநீர்த் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதனால் போதிய பயன் கிடைக்காது. அதனால் மேட்டூர் உபரிநீர்த் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமாக செயல்படுத்தப்படும்.
ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம்
55. 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 வரை நீர்ப்பாசன நான்காண்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாசனப் பரப்பை 26.79 லட்சம் ஹெக்டேரிலிருந்து 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டம்
56. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தை ரூ.14,400 கோடி செலவில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
57. இத்திட்டத்தின் முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் ரூ.6,941 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.
58. அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுத்தி முடிக்கப்படும்.
புதிய பாசனத் திட்டங்கள்
59. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.
60. தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்குநேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
61. தென்பெண்ணை – துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கொள்ளிடம் தடுப்பணை 6 மாதங்களில் நிறைவடையும்
62. கொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் 71% நிறைவடைந்துள்ளன. அடுத்த 6 மாதங்களில் இப்பணிகள் முடிவடையும். கொள்ளிடம் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
63. காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.
64. மாவட்டம் தோறும் வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் வேளாண் பொருட்களைச் சார்ந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உற்பத்தியில் தொடங்கி, மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வரை அனைத்துப் பணிகளும் இங்கு நடைபெறும். இதன் மூலம் அப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
வேளாண் சட்டங்கள் – அரசின் நிலை
65. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று தமிழக அரசு கருதுகிறது.
66. வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய அமைப்புகளின் தலைவர்களை மத்திய அரசு நேரடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.
மணல் குவாரிகள் மூடல்
67. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும். அதனால் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எம்.சாண்ட் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
68. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்படும்.
69. வெளிநாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
70. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்ட யூகலெப்டஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்படும்.
71. அழிந்து வரும் கற்பக விருட்சமாம் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும்.
72. தமிழகத்தில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் – 2 புதிய அமைச்சகங்கள்
73. தமிழகத்தில் பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறை பிரிக்கப்பட்டு, அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
74. வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
75. வேளாண்மை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் முதல்வர் தலைமையில் வேளாண் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்படும். இதில், வேளாண்மை சார்ந்த 7 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள்.
76. டெல்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை (safal market) தொடங்கப்படும். இதன் மூலம் விளைபொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.
77. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.
78. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.
இலவச பேருந்து வசதி
79. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும்.
80. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வசதியாக, இரவு 8 மணிக்குப் பிறகு அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.
81. தமிழகத்தில் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
82. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு, கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.
83. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.
84. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்.
85. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1,000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
86. விவசாயிகளின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
87. தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
88. வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்னைத் திட்டத்தின் (Pricision Farming) மூலம் வருவாயை பெருக்குதல், விவசாயிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
89. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.
90. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.
91. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை (Sustainable Agriculture) செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.
92. முதல்நிலை வேளாண்மையை மாற்றியமைத்தல்: மண்வள நிலைகுறித்த வரைபடம் தயாரிக்கப்படும். சிறு-குறு நிலங்களின் மண்வளத்தை மீட்டெடுத்தல், அவற்றின் அடிப்படையில் எந்தப் பகுதியில் எந்தப் பயிரை அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானித்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
93. விரிவாக்க செயல்பாடுகளை ஊரக வளர்ச்சியுடன் இணைத்தல்: நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட ஊரக வணிக நடுவத்தின் மூலம் சந்தை மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பது தான் இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.
94. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.
95. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை (Special Agro- Economic Zone) அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.
96. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 75 தலைப்புகளில் 281 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.
இவை பமகயின் திட்டங்களாக கருதப்படக்கூடாது, ஆனால் விவசாயிகள் மற்றும் அரசாங்கத்தின் கோரிக்கை ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தமிழக அரசின் முதல் விவசாய நிதி அறிக்கையில் சாத்தியமானவற்றை சேர்க்க வேண்டும்; அந்த உண்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். “
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Discussion about this post