இந்தியாவின் உயர்ந்த விலை வாய்ந்த பங்கு என்ற அடையாளத்தை மீண்டும் எம்ஆர்எப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2024 அக்டோபர் 29-ஆம் தேதி நடந்த வர்த்தகத்தில், டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப்பை பின்னுக்குத் தள்ளி, எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனம் அதிக விலை கொண்ட பங்கு என முதலிடம் பிடித்தது.
அன்று, எல்சிட் பங்கின் விலை அதிர்ச்சி அளவிற்கு 66,92,535% உயர்ந்து ரூ.2,36,250-க்கு எட்டியது. பங்குச் சந்தை வரலாற்றில் ரூ.3.53 இலிருந்து ஒரே நாளில் ரூ.2.36 லட்சமாக உயர்ந்தது முதல் முறையாக அமைந்தது.
ஆனால், அண்மையில் நடைபெற்ற மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில், எம்ஆர்எப் பங்கின் விலை ரூ.1,37,834-ல் உறைந்தது. இது, எல்சிட் பங்கின் விலையான ரூ.1,29,300-ஐவிட அதிகமாகும். கடந்த ஆறு மாதங்களில் செயல்திறன் குறைவாக இருந்தபோதிலும், எம்ஆர்எப் மீண்டும் அதிக விலை கொண்ட பங்கு என்ற இடத்தை பிடித்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ரிசர்வ் வங்கியின் முதலீட்டு நிறுவன பிரிவில் பதிவு செய்யப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனம். தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் இல்லாவிட்டாலும், இது ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.