ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலும் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசனும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளனர். ஒரே நாளில் இருவரும் ஓய்வை அறிவித்தமை, கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
மேக்ஸ்வெல், கிரிக்கெட் ரசிகர்களால் ‘பிக் ஷோ’ என அழைக்கப்படும் இவர், 2012ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 149 போட்டிகளில் 3,990 ரன்கள், சராசரி 33.81, ஸ்ட்ரைக் ரேட் 126.70 ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். 77 விக்கெட்டுகள் மற்றும் 91 கேட்ச்களும் அவர் சாதனைகள். 2015, 2023 உலகக் கோப்பை வெற்றி அணிகளில் முக்கிய பங்கு வகித்தவர். 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளாசிய 201 ரன்கள் இன்னிங்ஸ், கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.
ஓய்வு குறித்து மேக்ஸ்வெல் கூறும்போது, “2027 உலகக் கோப்பை குறித்து தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லியுடன் உரையாடினேன். எனக்கு அத்தருணம் சாத்தியமில்லை என நினைத்தேன். எனவே, அந்த இடத்திற்கு மற்றொரு வீரரை தயாரிக்கலாம் என்று பரிந்துரைத்தேன். சுயநலத்தோடு விளையாட விருப்பமில்லை” என்றார்.
கிளாசன், தனது ஓய்வு அறிவிப்பில், “இது எனக்கென்று சோகமிகுந்த நாள். என் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். எனது எதிர்காலம் குறித்து சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றார். அவர் தென் ஆப்பிரிக்காவுக்காக 60 ஒருநாள், 58 டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.