மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அணியுடன் சேர்ந்து, வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி அவர்களுடன் மகிழ்ந்ததும், அவர்களையும் மகிழ வைத்ததும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஆவார்.
2022-ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வெடுக்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். “மிஸ்டர் 360 டிகிரி” என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக 420 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 20,014 ரன்களை குவித்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். அதற்குமத்தமாக 184 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.
இந்த சூழலில் தற்போது இந்தியா வந்திருக்கும் டிவில்லியர்ஸ், “மகிழ்வித்து மகிழ்” எனும் கோட்பாட்டை பின்பற்றி ஒரு அருமையான செயலில் ஈடுபட்டார். மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வீல்-சேர் அணியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடிய அவர், வீல்-சேரில் அமர்ந்தபடியே தனது தனித்துவமான ஷாட்களால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேபோல், சிங்கிள்களையும் எடுத்து விளையாடினார். அவரது பங்கேற்பை பார்த்த வீரர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.
“இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. இறுதி ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த ஆண்டு ஆர்சிபி-யின் ஆண்டாக அமையும் என நம்புகிறேன்,” என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.