ஆம்ஸ்ட்ராங்கைக் கொன்றவர்களில் ஒருவர் பாஜக பிரமுகர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் அவர் பாஜகவைச் சேர்ந்தவரா இல்லையா என்பது போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொலைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 8 பேரில் ஒருவர் பா.ஜ.க.வின் எஸ்சி, எஸ்டி பிரிவு திருநின்றவூர் கோட்ட தலைவர் செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதை காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்தார். ஆருத்ரா பணமோசடி வழக்குக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் கேட்டபோது, அதை விசாரித்து வருகிறோம் என்றார்.
இதைப் பற்றி முற்றிலும் எதுவும் கூற முடியாது. கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 63 கொலைகள் நடந்துள்ளன. மூன்று மணி நேரத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்தோம். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சிலர் கூறுவதை நாங்கள் விசாரிப்போம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என்று ரத்தோர் கூறினார்.
ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் உதவியதாகக் கருதி சுரேஷ் ஆதரவாளர்கள் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.