WhatsApp Channel
அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் மலை வடிவில் ஜோதியாக காட்சி அளித்தல் மற்றும் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் வழங்கிய நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் கணேசன் குருக்கள் கையிலேந்தி உள்ள பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் இருக்கும் “அண்ணாமலையார்” சன்னதி வெள்ளி கதவு அருகே தீபமாக காட்சியளித்தார்.
🔴LIVE | நேரலை | 29-11-2020 திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா | Tiruvannamalai Karthigai Deepam 2020
Posted by AthibAn Tamil News on Sunday, November 29, 2020
இதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார்.
காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாக மகாதீப நிகழ்வின் போது பக்தர்கள் மலையேறவும் கிரிவலம் சுற்றவும் தடை உள்ளது. விழாவில் அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை. எனவே கோயில் வலைத்தளம் மற்றும் தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post