WhatsApp Channel
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் நான்காம் ஆண்டாக நடக்கவுள்ள தீபஉற்ஸவம் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் அயோத்தியில் 2017ம் ஆண்டு ‘தீப உற்ஸவம்’ விழாவினை முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இந்தாண்டுக்கான இந்த நிகழ்ச்சியை ராமர் கோவில்கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் வெகு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏழு நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்கள் மட்டுமே விழா நடக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது : ராம பிரான் இலங்கையிலிருந்து திரும்பி வந்துமுடிசூட்டு விழாவில் பங்கேற்றதன் நினைவாக ஆண்டு தோறும் இந்த விழா நடத்தப்படுகிறது. ராமபிரானை பிரார்த்திக்கும் வகையில் அயோத்தி நகரம் முழுதும் 5.51 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் பல்லாயிரம் தீபங்கள் ஒளிரும். இந்த ஆண்டு ராம்லீலா வைபவத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படும்.
சரயு நதிக்கரையில் தீபம் ஏற்றும் நிகழ்விலும் பெண்கள் அதிகம் பங்கேற்பர். இந்த கொண்டாட்டங்களின் துவக்க விழா நவ. 13ல் நடக்கும். இதில் கவர்னர் மற்றும் முதல்வர் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Discussion about this post