WhatsApp Channel
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடப்பதற்கு முதல் நாள் மத்தியப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் தனது வீட்டில் கடவுள் ஹனுமன் குறித்த பாராயணம் நடத்துகிறார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் வரும் 5ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்; பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் போபால் நகரில் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், கடவுள் ஹனுமன் புகழ் பாடும் பாராயணம் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்நாத் வரும் 4-ம் தேதி போபால் நகரில் உள்ள அவரின் நேதாஜி இல்லத்தில் கடவுள் ஹனுமன் குறித்த பாராயணத்தை நடத்துகிறார். சமூக விலகலைக் கடைப்பிடித்து, அனைத்து சுகாதார விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். ஹனுமனின் தீவிர பக்தரான கமல்நாத், முக்கியமான விஷேச நாட்களில் இதுபோன்று பாராயணம் நடத்துவார். இதில் எந்தவிதமான அரசியல் கலப்பும் இல்லை. தீவிர ஹனுமன் பக்தர் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு கமல்நாத் ஏற்பாடு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர், தொண்டர்கள் அனைவரும் வீட்டில் அனுமன் பாராயணம் படிக்க கமல்நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post