WhatsApp Channel
‘இந்த குழப்பமான நேரத்தில், நம்மால், பகவத் கீதையில், உறுதி, வலிமை மற்றும் அமைதியை காண முடியும்’ என, அமெரிக்க ஹிந்து எம்.பி., துளசி கப்பார்ட் கூறியுள்ளார்.
அமெரிக்காவில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மறுபுறம், கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது.இந்நிலையில், 7ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.,யான துளசி கப்பார்டு, ஹிந்து மாணவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:இது ஒரு குழப்பமான நேரமாகும். நாளை எப்படி இருக்கும் என, யாராலும் கூற முடியாது. ஆனால், பகவத் கீதையில், கிருஷ்ணர் நமக்கு கற்பித்த பக்தி யோகா மற்றும் கர்ம யோகா நடைமுறை மூலம், உறுதி, வலிமை மற்றும் அமைதியை நம்மால் காண முடியும். இந்நேரத்தில், வாழ்க்கையில் நம் நோக்கம் என்ன என்பதை, உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அது ஒரு ஆழமான கேள்வி.
கடவுளுக்கும், கடவுளின் குழந்தைகளுக்கும், சேவை செய்வதே உங்கள் நோக்கம் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.வெற்றி என்பது, ஆபரணங்கள், ஆடம்பர பொருட்கள் அல்லது சாதனைகளால் வரையறுக்கப்படுவதில்லை. சேவையை மையமாகக் கொண்டு அமையும், மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வெற்றியை தீர்மானிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
Discussion about this post