தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவானது மேலும் ஒரு வார காலம் (ஜூன் 14 வரை) நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூரவ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தினசரி பாதிப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 35 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வந்தது. இதனை கட்டுப்படுத்த மே 10 முதல் அமல்படுத்தப்பட்டு இருந்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பலனளிக்கவில்லை. காரணம் தினசரி காலை 10 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட வழக்கம் போல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கம் போல காணப்பட்டது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய கூடாது என காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்ததால், பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி வெளியே சுற்றுவதை காண முடிந்தது.
இதனை கவனித்த அரசு மே 24 முதல் முழு ஊரடங்கை தீவிரப்படுத்தியது. மருந்தகங்கள், ஹோட்டல்கள் தவிர பிற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்தால் அவர்களின் வாகங்னல் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வாகனங்கள் ஊரடங்கு முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தினசரி தேவைப்படும் காய்கறி, மளிகை, பழங்கள், பால் மற்றும் பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவது தவிர்க்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவலும் குறையத் தொடங்கியது. தினசரி படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை சரிந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 22,651 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பலனளிப்பது தெரிய வந்துள்ளது. தலைநகர் சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு, தற்போது கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ள மாநில அளவிலான தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு, சுகாதாரத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இதில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள சில மாவட்டங்களில் மட்டும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கலாம் எனவும், பிற மாவட்டங்களில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
Discussion about this post