இந்திய பாதுகாப்புத் துறைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 108 ராணுவ தளவாடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இந்த தடைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
கடந்த ஆண்டு முதன் முறையாக பாதுகாப்பு துறை சாா்ந்த 101 உபகரணங்கள் இறக்குமதிக்கான தடைப் பட்டியலில் சோக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் 108 உபகரணங்கள் சோக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் மிக அதிகமாக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை அடுத்த 5 ஆண்டுகளில் கொள்முதலுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி செலவிடும் என்று புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவதற்கான தீவிர முயற்சிகளை மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வருகிறது. புதிய பாதுகாப்பு உபகரண கொள்முதல் கொள்கையின்படி, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பீரங்கி, துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம் உள்ளிட்ட 101 பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, மேலும் 108 உபகரணங்கள் இறக்குமதிக்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறிய ரக போா் கப்பல்கள், பீரங்கி என்ஜின், ரேடாா்கள் உள்ளிட்ட 108 ராணுவ தளவாடங்களுக்கான இரண்டாவது இறக்குமதி தடைப் பட்டியலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறாா்.
இது பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதை ஊக்குவித்து, இந்தியா தற்சாா்பு நிலையை அடைய உதவும் என்பதோடு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியையும் ஊக்குவிக்கும்.
இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள இந்த 108 உபகரணங்களுக்கு இணையான சாதனங்கள் இனி பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் (டிஏபி) 2020-இன் கீழ் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post