1928. பிரேசில் நாட்டு நாளிதழ்கள் அத்தனையும் ஒரு பெயரை தினம் தினம் தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன. அவரின் வருகை தங்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக அவர்கள் கூக்குரலிட்டார்கள். கொக்கரித்தார்கள். அந்தப் பெயர் ஹென்றி ஃபோர்டு ( Henry Ford ).
ஃபோர்டு கார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, பிரேசிலில் தன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க வேலைகளைத் தொடங்கியிருந்தார்.
அமேசான் காடு
அமேசான் நதியின் கிளை நதியான டாப்பேஜாஸ் ( Tapajos ) நதிக்கரையில் 5,625 சதுர மைல் நிலத்தை, 1, 25,000 அமெரிக்க டாலர்களுக்கு ஃபோர்டு( Ford) நிறுவனம் வாங்கியிருந்தது. அங்கு ஃபோர்டு லேண்டியா ( Fordlandia ) என்கிற தன் கனவு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஹென்றி ஃபோர்டு.
ஹென்றியின் இந்த முடிவிற்குள் இரண்டு விஷயங்கள் அடங்கியிருந்தன. முதலாவது அவரின் வியாபார குறிக்கோள் ( Business Motto ). அன்றைய காலகட்டங்களில், ரப்பருக்கான ( Rubber ) உலகின் ஒரே மிகப்பெரிய தயாரிபாளராக பிரிட்டன் தான் இருந்தது. அது தன் காலனியாதிக்க நாடுகளாக இருந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், பிரேசிலிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ரப்பர் விதைகளைக் கொண்டு ரப்பர் தோட்டங்களை உருவாக்கியது. ரப்பருக்கான சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் இருந்தது. இதை உடைக்க நினைத்தார் ஹென்றி.
ஹென்றி ஃபோர்டு (henry ford)
பிரேசிலில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி, ரப்பர் தொழிற்சாலையை ஆரம்பித்தால் பிரிட்டனின் சந்தை உடையும், கூடவே, தன் கார் தயாரிப்புக்கு தேவையான ரப்பர்களையும் தானே தயாரித்துக் கொள்ள முடியும் என்று நம்பினார். இதன் மூலம், பெரிய லாபத்தை ஈட்டிட முடியுமென்று அவர் நம்பினார்.
இரண்டாவதாக அவருக்கு ஒரு சமூக குறிக்கோள் இருந்தது. ஃபோர்டின் சமூக குறிக்கோளைப் புரிந்துக்கொள்ள முதலில் அவரின் சில இயல்புகளையும், நம்பிக்கைகளையும் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹென்றிஃபோர்டு ஆட்டோமொபைல் தொழில்துறையின் முன்னோடி. கார் தயாரிப்புகள் மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்திற்கான செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்ததில் அவர் ஒரு முன்னோடி.
Brazil – Fordlandia – Tapajos
இன்றும் பல தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் அசெம்ப்ளி லைன் ( Assembly Line ) எனும் முறையைக் கொண்டு வந்தவர் அவர் தான். மேலும், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 8 மணி நேர வீதம், வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்கிற நெறிமுறைகளைக் கொண்டு வந்தார். அன்றைய காலகட்டங்களில், தன்னிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கான அதிகபட்ச ஊதியத்தையும் அளித்தார். இப்படியாக மனிதர்களை கையாளும் விஷயங்களில் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
ஹென்றி ஃபோர்டு தான் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாகவும், தன்னுடைய கொள்கைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மனித சமூகத்தை மேம்படுத்தும் வகையில் இருப்பதாகவும் நம்பினார். அதனால், அவர் தன் கொள்கைகள், தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு கனவு நகரத்தை உருவாக்க வேண்டுமென்றும் விரும்பினார்.
ரப்பர் மரங்கள்
எனவே, நான்காம் தர நாடாக இருக்கும் பிரேசிலை உயர்த்தவும், சுத்தம், சுகாதாரமற்று இருக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கை முறையை கற்பிக்க வேண்டுமென்கிற ஒரு சமூக குறிக்கோளையும் இதில் அவர் கொண்டிருந்தார்.
ஃபோர்டுலேண்டியா கட்டுமானப் பணிகள்
பிறருக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர், உதவி கோருபவரின் சரியான தேவையை அறிந்து செய்வது தான் சிறந்த செயல். அதைவிடுத்து, தனக்கு என்ன செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, அதைச் செய்வது ஒரு சரியான உதவியாக இருக்காது. அப்படியான ஒரு தவறான பார்வையில் அவர் பிரேசிலை அணுகியதும், பிரேசில் மக்களை எடைபோட்டதுமே அவரின் கனவு நகரத்திற்கான அழிவாக மாறியது. அது தொடக்க நாள் முதல், கடைசி நாள் வரை பல பெரும் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டேயிருந்தது.
1927ம் ஆண்டு பிரிட்டன் பிடியிலிருந்த சர்வதேச ரப்பர் சந்தை விடுபட்டு திறந்த சந்தை ( Open Market ) உருவாகிவிட்டிருந்தது. இந்தச் சமயத்தில் ரப்பர் தொழிற்சாலைக்கு இத்தனைப் பெரிய முதலீடு தேவையில்லை என்று பலர் சொல்லியும் ஹென்றி கேட்கவில்லை. பிடிவாதமாக தன் முடிவில் நின்றார்.
ரப்பர் தொழிற்சாலை
அடுத்ததாக கட்டுமானங்களைத் தொடங்கவே பல பிரச்னைகளை சந்தித்தது ஃபோர்டுலேண்டியா. டாப்பேஜாஸ் ( Tapajos ) நதியின் வெள்ள அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு உயரமான இடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். ஆனால், சரியான சாலைகள் இல்லாத அந்தக் காட்டுப்பகுதியைத் தாண்டி கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. திட்டமிட்டதைவிடவும், ஒரு வருடம் கழித்தே கட்டுமானப் பணிகள் அங்குத் தொடங்கின.
நகரை இரண்டாக பிரித்துக் கட்டினர். ஒரு பக்கம் அமெரிக்கர்கள் வாழும் ” வில்லா அமெரிக்கானா ” ( Vila Americana ) பகுதி. இன்னொன்று, பிரேசில் மக்களுக்கான ஒரு காலனி. அமெரிக்கர்கள் வாழும் பகுதியானது தண்ணீர் பைப்லைன் முதற்கொண்ட பலவித வசதிகளை கொண்டிருந்தது. பிரேசில் காலனி குடிசைகள் நிறைந்து கிணற்று தண்ணீரைக் கொண்டிருந்தது. இப்படி, தொடக்கத்திலிருந்தே வேற்றுமை அங்கு வேறூன்றியிருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஆழப் படரத் தொடங்கின.
Fordlandia
1930ம் ஆண்டு. டிசம்பர் மாதம் 20ம் தேதி ஃபோர்டுலேண்டியாவின் ( Fordlandia ) கேண்டினில் ஒரு மிகப்பெரிய வன்முறை வெடித்தது. டேபிளில் உணவு பரிமாறும் வழக்கத்தை மாற்றி, செல்ஃப் சர்வீஸ் ( Self Service ) வகையிலான Cafeteria-வாக அதை மாற்றியது. இதில், பிரேசில் மக்கள் சிலர் கீழ்மையாக நடத்தப்படுவதாகச் சொல்லி பிரச்னை செய்தார்கள். அது மிகப்பெரிய கலவரமாக உருமாறியது. தொழிற்சாலைகளிலிருந்த இயந்திரங்கள் உட்பட பலவும் தீக்கிரையாகின.
ஃபோர்டுலேண்டியாவில் ( Fordlandia ) அடிப்படையில் மும்முனைப் பிரச்னை இருந்தது.
முதலில், அங்கு குடி பெயர்ந்து வந்திருந்த அமெரிக்கர்கள். அவர்களுக்கு பிரேசில் மழைக்காடுகளின் சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், அவர்கள் பிரேசில் மக்களை ஒரு ஆதிக்க மனப்பான்மையோடே அணுகினார்கள்.
அடுத்ததாக , ஹென்றிஃபோர்டு அங்கு நிறுவ முயற்சித்த கருத்துகள், வாழ்க்கை முறை.
இறுதியாக, பிரேசில் நாட்டு தொழிலாளர்கள்.
இந்த மூன்றும் கடைசிவரை ஒரு நேர்கோட்டிற்கு வரவேயில்லை.
இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு சமூக தோல்வியாக ( Social Failure ) அமைந்தது.
அடுத்ததாக, பிரேசில் நாட்டு மக்களை ஒரு ஆதிக்க மனப்பான்மையோடு அணுகியதால், அவர்களின் காடுகள் குறித்த அபரிமிதமான அறிவாற்றலை தனக்கு சாதமாக பயன்படுத்திக்க முடியவில்லை. குறிப்பாக, ரப்பர் மரங்களை நெருக்கமாக நட வேண்டாம் என்று அவர்கள் சொன்னதை மறுதலித்து, நெருக்கமாக நட்டதால், ஒரு மரத்திற்கு வந்த நோய்த்தொற்று அடுத்தடுத்த மரங்களுக்கும் பரவி பெரிய அழிவும், பொருளாதார நஷ்டமும் ஏற்பட்டன.
இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு வன தோல்வியாக ( Jungle Failure ) அமைந்தது.
பிரேசில் மண்ணின் மக்கள்
இறுதியாக, ஹென்றியினால் ஒரு துளி ரப்பரைக் கூட பிரேசிலிலிருந்து தயாரித்து தன் கார் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு தொழில் தோல்வியாக ( Business Failure ) அமைந்தது.
இப்படியாக அவருக்கு ஏற்பட்ட தோல்விகளே அந்த நகரத்திற்கான அழிவாக மாறியது.
இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த சமயம் ஃபோர்டு கார் நிறுவனத்தின் நிர்வாகம், இரண்டாம் ஹென்றி ஃபோர்டு கைக்கு மாறியது. அவர் செய்த முதல் காரியம் ஃபோர்டுலேண்டியாவை ( Fordlandia ) சொற்ப விலைக்கு பிரேசில் அரசாங்கத்திற்கு விற்றது தான்.
பணமும், ஆதிக்க வெறியும் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கிய. அவமானப்படுத்திய ஃபோர்டுலேண்டியாவிற்குள் பிரேசில் மக்கள் நீண்டகாலம் போகவே இல்லை. இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் கூட 9 பேர் மட்டுமே அந்நகரில் வாழ்ந்து வந்தனர். 2000-த்திற்குப் பிறகு. அந்த நகரின் பல அடையாளங்கள் அழிந்ததால். கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். 2017 நிலவரப்படி. இரண்டாயிரம் பேர் அங்கு வசிக்கின்றனர்.
” உலகின் மிக முக்கியமான, சிக்கலான உயிர்ச்சூழல் கொண்ட காடு அமேசான். அமேசானின் அடிப்படைகளையும், அந்த மக்களின் தேவைகளையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல். அந்த காடுகளை அழித்து ஒரு மிகப்பெரிய தொழிற் புரட்சியை உருவாக்க முயற்சித்தார் ஹென்றி ஃபோர்டு.
அமேசான் பழங்குடிகள்
ஃபோர்டுலேண்டியா (Fordlandia) ஒரு நகரின் கதை அல்ல. அது ஹென்றி ஃபோர்டின் EGO-வின் கதை. அதனால் தான் அவரும் கடைசி வரை ஃபோர்டுலேண்டியா-வை நேரில் பார்க்கவில்லை. ஃபோர்டுலேண்டியா-விலிருந்து ஒரு சொட்டு ரப்பர் துளி கூட ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்றடையவில்லை.” என்கிறார் கிரெக் கிராண்டின் (Greg Grandin), வரலாற்றுப் பேராசிரியர், யேல் பல்கலைக்கழகம் ( Yale University) – Fordlandia: The Rise and Fall of Henry Ford’s Forgotten Jungle City என்ற புத்தகத்தின் எழுத்தாளர் )
ஆங்கிலத்தில் யூதர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொள்வதற்கு Anti-Semitism என்று சொல்வார்கள். அப்படியான கருத்து கொண்ட ஒருவராகத் தான் ஹென்றி ஃபோர்டு தன் வாழ்நாள் முழுக்கவே இருந்திருக்கிறார்.
தான் நடத்தி வந்த “DearBorn Independent ” எனும் வார செய்தித்தாளில் ( Weekly Newspaper ) தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். இதனால், அந்த செய்தித்தாளே தடை செய்யப்பட்டது. ஆனாலும், அதற்கெல்லாம் ஹென்றி அஞ்சவில்லை.
ஃபோர்டுலேண்டியாவின் ( Fordlandia ) அழிவிற்குப் பின்னணியில் யூதர்களின் சதி இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
Discussion about this post