ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரை பெரிதும் எண்ணாது, இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி.
புயல், மழைக் காலங்களில் துணிச்சலோடு மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான போரில் நமது ஆயுதத்தை கீழிறக்க கூடாது. இரண்டாவது அலையை முறியடிப்போம். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை தடுப்பூசி செலுத்திய பிறகும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வெற்றிக்கான ஒரே வழி இதுதான்.
கொரோனாவின் தொடக்கத்தில் நாட்டில் ஒரே ஒரு சோதனை ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று 2500க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்படுகின்றன. ஆரம்பத்தில் ஒருநாளில் சில நூறு சோதனைகள் மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது ஒரு நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்,
பின்னர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக உள்ள தில்லியைச் சேர்ந்த பிரகாஷ் காண்ட்பால் என்பவருடன் பிரதமர் உரையாடினார்.
அவர் கூறுகையில், தான் தற்போது பணியாற்று வரும் தில்லி ஐ.எல்.பி.எஸ் மருத்துவமனையில் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதாகவும், அனைத்து நேரங்களிலும் பிபிஇ அணிந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, கோவிட் -19 காலங்களில் இந்தியாவின் கடின உழைப்பாளி விவசாயிகள்தான். தேசத்திற்கு உணவளிப்பதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொற்றுநோய் இருந்தபோதிலும் விவசாயிகள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளனர்.
பீகாரின் ‘லிச்சி’ பழத்துக்கு அதன் அடையாளத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அதற்கு புவிசார் குறியீடு வழங்கியது என்றார்.
இதன்பின்னர் திரவ ஆக்ஸிஜன் டேங்கரை இயக்கும் உ.பி.யைச் சேர்ந்த தினேஷ் உபாத்யாய் என்பவருடன் பிரதமர் பேசினார். இந்த நேரத்தில் நீங்கள் ஓட்டுனர் மட்டுமல்ல, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒருவர் என்று கூறி அவரின் பணி குறித்து கேட்டறிந்து நன்றி தெரிவித்துக்கொண்டார்.
சாதாரண காலங்களில், திரவ மருத்துவ ஆக்ஸிஜனின் தினசரி உற்பத்தி 900 மெட்ரிக் டன். இப்போது, இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 9,500 மெட்ரிக் டன் வரை 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு வசதியாக, இந்திய ரயில்வேயும் முன்வந்துள்ளது. திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை சமாளிக்க ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல ரயில்வே உதவி வருகிறது. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக்ஸிஜனை மிக விரைவாகவும் அதிக அளவிலும் கொண்டு சென்றுள்ளன.
தொடர்ந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் லோகோ பைலட் ஷிரிஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். இவர் 1.5 மணி நேரத்தில் 125 கிமீ. பயணித்தாக பைலட் தெரிவித்தார். அதற்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேலும், ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸானது, முழுக்கமுழுக்க பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது. இவர்களுக்கு மட்டுமா, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
தொடர்ந்து, பிரதமரிடம் உரையாடிய விமானப்படை குரூப் கேப்டன் ஏ.கே. பட்நாயக், கடந்த ஒரு மாதத்தில் உள் மற்றும் வெளிநாட்டில் இருந்து ஆக்ஸிஜன் டேங்கர்கள், திரவ ஆக்ஸிஜன் கொள்கலன்களை தாங்கள் தொடர்ந்து கொண்டு வருவதாக கூறினார்.
குறிப்பாக விமானப்படையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன் வினியோகம் செய்வதாகவும், நெருக்கடியான இந்த நேரத்தில் நம் நாட்டு மக்களுக்கு உதவுவது அதிர்ஷ்டமான வேலை என்கிறார்.
தொடர்ந்து பேசிய கேப்டன் பட்நாயக்கின் மகள் அதிதி, நான் எனது தந்தையை இழந்தாலும், அவர் நாட்டுக்கு சேவை செய்து பல உயிரை காப்பாற்றிய விதம் குறித்து பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன்பின்னர், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றம் கொரோனா காலத்தில் அதனை எதிர்கொள்ள பெரும் பலனை அளித்துள்ளது. 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. எங்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்தும் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்’ என்றார்.
Discussion about this post