வியட்நாமில் புதிய அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவக்கூடியதாக உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. அதன்பின், அவ்வைரஸ் உருமாற்றம் அடைந்து பல நாடுகளுக்கும் பரவியது. அவை, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், பிரிட்டன் வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என வகைப்படுத்தி கூறப்பட்டன. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் புதிய வகை அதிக வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது என்றும் வியட்நாம் அமைச்சர் நுயேன்தன்லாங் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வைரஸ், இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகியவற்றின் கூட்டு கலவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்றிய நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்ததாகவும், அதை வைத்து ஆய்வு செய்த போது அது புதிய வகை வைரஸ் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வியட்நாம் அரசு, உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அனுப்பியுள்ளது. அது புதிய வைரஸ் என்பது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றிய அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு வெளியிடும்.
Discussion about this post