ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்க முன்வந்தால் அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த போதிய பணிகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளை அறிவித்தது வருகிறார். கொரோனா தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் புதிய அறிவிப்பாக தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகரிலும், 3 மாநகராட்சிகளாக திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய 3 இடங்கள் என 16 இடங்களில் மருத்துவமனைகள் அமைய வேண்டும் என கூறினார். ஆந்திர பிரதேச மாநிலம் ஏற்பட்ட பிறகு ஆந்திர மாநிலத்திற்கு சிறந்த மருத்துவமனைகள் அமையவில்லை என குறிப்பிட்டார்.
ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் மருத்துவமனைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் ஆந்திரா முழுவதும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். இதனால் மருத்துவ சிகிச்சைக்காக ஆந்திர மக்கள் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என தெரிவித்தார். 5 ஏக்கர் நிலம் 6 பேருக்கும், 10 பேர் முன்வந்தால் 50 ஏக்கர் நிலம் பிரித்து கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post