மேற்கு வங்கத்தின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னால்கூட அதற்குத் தயார் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைமைச் செயலரை மத்திய அரசு திரும்பப் பெற்றது, புயல் பாதிப்புகள் குறித்த பிரதமர் மோடியின் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மம்தா கூறியது:
“மேற்கு வங்கத்தில் பாஜகவின் தோல்வியை ஜீரணிக்க முடியாததால் மோடியும், அமித் ஷாவும் முதல் நாளிலிருந்தே எங்களுக்குப் பிரச்னையை உண்டாக்கத் தொடங்கிவிட்டார்கள்.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னால்கூட அதற்குத் தயார்.
தலைமைச் செயலரின் தவறு என்ன? கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலரைத் திரும்பப் பெறுவது மத்திய அரசு அரசியல் செய்வதையே வெளிப்படுத்துகிறது.
புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மற்றும் பிரதமருக்கிடையே நடைபெற வேண்டியது. அந்த அமர்வில் பாஜக தலைவர்கள் அழைக்கப்பட்டது ஏன்? ஆனால், குஜராத், ஒடிசாவில் இதுபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை” என்றார் அவர்.
Discussion about this post