புதிய தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்க அனைத்து சமூக தளங்களையும் அரசாங்கம் கேட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய சமூக ஊடக நிறுவனங்களும் இதைப் பின்பற்றியுள்ளன. இருப்பினும், ட்விட்டர் இன்னும் விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரும்பாலான முக்கிய சமூக ஊடக தளங்கள் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 இன் படி, அவர்களின் முதன்மை இணக்க அலுவலர், நோடல் தொடர்பு நபர் மற்றும் குறை தீர்க்கும் அலுவலர் ஆகியோரின் விவரங்களை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ளனர்.
கூ, ஷேர்சாட், டெலிகிராம், லிங்க்ட்இன், கூகிள், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற குறிப்பிடத்தக்க சமூக ஊடக தளங்கள் புதிய விதிகளின் தேவைக்கேற்ப அமைச்சகத்துடன் விவரங்களை பகிர்ந்துள்ளனர்.
ட்விட்டர் இன்னும் விதிகளை பின்பற்றவில்லை
நேற்றைய அரசாங்கத்தின் உறுதியான பதிலுக்குப் பிறகு, ட்விட்டர் நேற்றிரவு ஒரு தகவல்தொடர்பு அனுப்பியது. இந்தியாவில் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு வழக்கறிஞரின் விவரங்களை அவர்களின் நோடல் தொடர்பு நபர் மற்றும் குறை தீர்க்கும் அதிகாரியாகப் பகிர்ந்து கொண்டது.
குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் ஊழியர்களாகவும், இந்தியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.
முதன்மை இணக்க அலுவலரின் விவரங்களை ட்விட்டர் இதுவரை அமைச்சகத்திற்கு அனுப்பவில்லை.
ட்விட்டருக்கு அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கை
இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் குறித்து கவலை எழுப்பிய ட்விட்டருக்கு கடுமையான பதிலில், மத்திய அரசு நேற்று தேவையில்லாத பேச்சுக்களை நிறுத்திவிட்டு சட்டங்களுக்கு இணங்க கேட்டுக் கொண்டது.
“ட்விட்டர் தேவையில்லாத விஷயங்களை பேசுவதை நிறுத்தி விட்டு இந்திய சட்டங்களுக்கு இணங்க வேண்டும். சட்டத்தை உருவாக்குதல் மற்றும் கொள்கை வகுத்தல் ஆகியவை இறையாண்மையின் முழு உரிமையாகும். ட்விட்டர் ஒரு சமூக ஊடக தளமாகும். மேலும் இந்தியாவின் சட்ட கொள்கை கட்டமைப்பிற்கு என்ன இருக்க வேண்டும் என்று ஆணையிடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.” என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ட்விட்டரின் அறிக்கை உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்திற்கு அதன் விதிமுறைகளை ஆணையிடும் முயற்சியாகும். அதன் நடவடிக்கைகள் மற்றும் வேண்டுமென்றே மீறுவதன் மூலம், ட்விட்டர் இந்தியாவின் சட்ட அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முற்படுகிறது” என்று அமைச்சகம் அறிக்கையில் மேலும் கூறியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post