தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இந்த சட்டத்தில் உள்ள சில சரத்துகளுக்கு எதிராக வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு தொடுத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது, இந்த வழக்கு எந்த நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது மற்றும் எப்பொழுது விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் இந்திய அரசு அதை கட்டுப்படுத்த திணறிவரும் நிலையில், அரசின் செயல்பாடுகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பதிவிடப்பட்டு வைரலானதுடன் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ட்விட்டரில் வெளியான பல்வேறு பதிவுகளை நீக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு கேட்டுக்கொண்டது, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத ட்விட்டர் நிறுவனம், காங்கிரஸ் கட்சி வைத்த கோரிக்கையை ஏற்று பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் வெளியிட்ட பதிவை உண்மைக்கு மாறான தகவல் என்று முத்திரை குத்தியது.
அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ட்விட்டர் நிறுவன அலுவலக்கத்துக்கு சென்ற காவல் துறையினர் இது குறித்து விசாரித்தனர்.
ட்விட்டர் தவிர பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு நெருக்கடிகளை அரசு கொடுத்துவருகிறது.
இந்த நிலையில், 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்-அப் தனது பயனர் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.
தற்போது வந்திருக்கும் இந்த புதிய சட்டத்தால், பயனர்களின் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அதே நேரத்தில் தகவல் பதிபவர் பற்றிய வெளிப்படை தன்மை கடைபிடிக்கும் பட்சத்தில் அனைத்தும் பயனர்களின் தனிப்பட்ட தரவை பாதுகாப்பது கடினம் என்று கூறியிருக்கிறது.
2017 ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில், தேவை படும் நேரத்தில் பயனர் குறித்த விவரங்களை நிறுவனங்களிடம் அரசு பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து பயனர் குறித்த விவரங்களும் வெளியிட வேண்டும் என்பது அந்த தீர்ப்புக்கு எதிரானது என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு, சமூக ஊடகங்கள் மீது மோடி அரசு மேற்கொண்டு வரும் நெருக்கடிகளை உணர்த்துவதாக உள்ளது என கூறி வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post