வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய மாநிலங்கள் எடுத்து வருகின்றன.
யாஸ் புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரெயில்களின் சேவையை வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. இதேபோன்று, ஒடிசாவில் கடலோர பகுதியில் வசித்து வரும் மக்கள் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் தீவிரமடைந்து ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தம்ரா துறைமுகம் அருகே இன்று காலை தீவிரமடையும்.
இதன்பின்னர் ஒடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதியில் பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதியருகே இன்று நண்பகல் அதி தீவிர சூறாவளி புயலாக கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Discussion about this post