யாஸ் புயல்…. மேற்கு வங்காளம், உத்தரகாண்டில் கனமழை….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…!

0
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி ஒடிசாவின் வடக்கு கடலோரம் தம்ரா துறைமுகத்திற்கு வடக்கே மற்றும் பாலசோருக்கு தெற்கே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யாஸ் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புயலால் மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.  அதிக அளவாக 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.  இந்த புயலானது வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம், ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஜார்க்கண்டில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் பல இடங்களில் லேசான மற்றும் மித அளவிலான மழையும், மேதினிப்பூரின் ஒரு சில பகுதிகளில் தீவிர கனமழையும், பங்குரா, ஜார்கிராம், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவற்றின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழையும், கொல்கத்தா, நாடியா உள்ளிட்ட பிற இடங்களில் கனமழையும் பெய்ய கூடும் என தெரிவித்து உள்ளது.
ஜார்க்கண்டின் பல இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மித அளவிலான மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிக கனமழை மற்றும் தீவிர கனமழை பெய்ய கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி யாஸ் புயலானது வங்காள விரிகுடாவின் வடமேற்கில் மையம் கொண்டுள்ளது.  இந்த புயலானது தம்ரா நகருக்கு கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும் (ஒடிசா), பாரதீப்புக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கில் 90 கி.மீ. தொலைவிலும், டிகா நகரின் தெற்கே 100 கி.மீ. தொலைவிலும் (மேற்கு வங்காளம்) மற்றும் பாலசோரின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 105 கி.மீ. தொலைவிலும் (ஒடிசா) மையம் கொண்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here