டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி தொடரை வென்றது.
இலங்கை கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, டாக்காவில் உள்ள ஷேர் பங்களா மைதானாத்தில் கடந்த 23ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அதே மைதனாத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, பேட்டிங் செய்த வங்கதேச அணி 48.1 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இந்தப் போட்டியிலும் சதமடித்து 125 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மஹமதுல்லா 41 ரன்களும், லித்தன் தாஸ் 25 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா, லக்ஷ்மண் சண்டகன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இசுரு உடானா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, 247 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கடந்த ஆட்டத்தைப் போலவே இந்தப் போட்டியிலும், வங்கதேச பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 24 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் 10, 15 என்று ரன்கள் எடுத்த நிலையில், அந்த அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டக்வொர்த் லுயிஸ் விதிப்படி வங்கதேசம் 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெஹிதி ஹசன், முஷ்டாபிசுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
சிறப்பாக விளையாடி சதமடித்த வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக, மே 18ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் இலங்கை பந்துவீச்சாளர்கள் இசுரு உதானா, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகியோருக்கு முடிவுகள் பாசிட்டிவ் என வந்தது. இதனால் திட்டமிட்டபடி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற கேள்விக்குறி எழுந்தது. சரியாக டாஸ் போடுவதற்கு 1 மணிநேரம் முன்பாக இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் இலங்கை வீரர்கள் இசுரு உதானா, சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. ஆனால் மற்றொரு வீரர் ஷிரான் பெர்னாண்டோவிற்கு இரண்டாவது முடிவு பாசிட்டிவ் என வந்ததால், அவர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து, முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.
Discussion about this post