வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது. வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். ரிஷபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும்.
முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். விசாகம், ஞான நட்சத்திரம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனை வணங்கி எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகம் நாளில்தான் மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள். ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.
புத்தர் ஞானமடைந்த நாள்
வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. வைகாசி பௌர்ணமி புத்த பூர்ணிமா. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான். நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.
ஆறுமுகன் அவதாரம்
சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
வைகாசி விசாகத்தில் குழந்தைகள்
இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தார். அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்.
எதிரிகள் தொல்லை நீங்கும்
ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளிய இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறும்.
முன்னோர்கள் கொண்டாடிய விழா
முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை. முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் கந்த சஷ்டியுமே மிக முக்கியமானவை. முன்னோர்கள் காலத்தில் இருந்தே வைகாசி விசாகம் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
சண்முகருக்கு அபிஷேகம்
வைகாசி விசாகத்திருவிழா கொண்டாடப்படும் இந்த நாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிவில் மூலவர் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வைகாசி விசாக நாளில் விரதமிருந்து முருகனை மனதார நினைத்து வணங்கி தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சாதம், மோர், பானகம் போன்றவைகளைத் தானம் தர குலம் தலைக்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
Discussion about this post