வைகாசி விசாக நாள், முருகப்பெருமானின் பிறந்தநாள். காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்றும், வால்மீகி ராமாயணத்தில் இருந்து காளிதாசர் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
வைகாசி மாதத்தில் பெளர்ணமி நாளில் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். எனவேதான் இம்மாத பெளர்ணமி நாளை “வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம்.
கார்த்திகை பெண்களின் அன்புக்குரிய அறுமுகன் முருகன் ஆறு வயது வரை மட்டுமே குறும்புகளை செய்தாராம்.
பாலமுருகன், பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தவர். அப்போதும் அவர் பாலகனே. தந்தைக்கே பாடம் சொல்லி குருவான குருபரன் குழந்தையாய் இருந்தபோது நிகழ்த்திய லீலையே இது.
அவ்வைக்கு நாவல்பழத்தைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டதும் பால்ய பருவத்தில் தான் என்றால், மாம்பழத்திற்காக உலகைச்சுற்றி வந்த பாலகன், கோபித்துக் கொண்டு தண்டாயுதபாணியாக பழநி மலையில் நின்ற போதும் அவர் சிறுவன் தான்.
வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் வடிவேலன் முருகனின் அவதார நட்சத்திரம் என்பதால் பக்தர்கள் அனைவரமும் முருகனை வழிபடுகின்றனர். அன்றைய தினம் வேலவனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். குன்றுதோறும் குடி கொண்டிருக்கும் குமரனை வழிபட்டால் குறைகள் அகலும். கார்த்திகை மைந்தனை கரம் குவித்து வணங்கினால் கவலைகள் பறந்தோடும் என்பது நம்பிக்கை.
வைகாசி விசாக தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கர்ப்பகிரகத்தில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இது கோடைக்காலம் என்பதால், முருகனை குளிர்வித்தால், அவர் மனம் குளிர்ந்து உலகை குளிர்விப்பார் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணரின் அறிவுரைப்படி அர்ஜூனன், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றதும் வைகாசி விசாக நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.
Discussion about this post