இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏக தேசத்தையும் புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவது குறித்து (21.05.2021) அன்று மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மத்தியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, “இந்த கொரோனாவின் இரண்டாவது அலை நமது அன்பிற்குரிய பலரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது”, என்று கூறியபோது கண்கலங்கினார்.
இச்சம்பவமானது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளானது.
வைரலான முகப்புப்படம் |
இதைத்தொடர்ந்து, சர்வதேச நாளிதழான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ன் மே 21, 2021 தேதியிட்ட நாளிதழின் முகப்புக் கட்டுரையில் ‘இந்தியாவின் பிரதமர் கண்கலங்கினார் (India’s PM Cried)’ என்ற தலைப்பில் ஒரு முதலை நீலிக் கண்ணீர் வடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருப்பது போன்ற செய்தித்தாளின் பக்கம் ஒன்று இணையத்தில் வைரலானது.
ஒருபுறம், இதனை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து மோடியை விமர்சிக்கத் துவங்கினர். பலர் இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மறுபுறம், இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஊடகங்கள் ஆராயத் துவங்கின. இறுதியில், இது ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழைப் போன்ற போலியான புகைப்படம் என்றும், ‘தி டெய்லி நியூயார்க் டைம்ஸ்’ என்ற பகடி செய்யும் ட்விட்டர் பக்கம் இதை செய்துள்ளது என்று தெரியவந்தது. பின்னர், ‘இது வெறும் நையாண்டி’ என்று அவர்களே உறுதிபடுத்திவிட்டனர்.
மேலும் அதே தேதியிட்ட (21.05.2021) ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்கத்தில் சிரியாவின் புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது இதை மேலும் உறுதிபடுத்தியுள்ளது. அந்த நாளிதழின் எந்தவொரு பக்கத்திலும் மோடி குறித்த செய்தி வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று தி நியூயார்க் டைம்ஸ் |
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிரஷாந்த் பூஷன் பின்னர் இது போலியானது என்று தெரிந்ததும் அதை நீக்கியுள்ளார்.சமீபத்தில் தான், காங்கிரஸ் கட்சியினர் புதிதாக ‘டூல்கிட்’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க செயலாற்றி வருகின்றனர் என்று பா.ஜ.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர். ‘இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்குமா…?’ என்பது குறித்து கேள்வி எழுந்து உள்ளது.
Discussion about this post