பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மீதான லஞ்ச வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ள சிபிஐ, தனது முதல் கட்ட விசாரணையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த போது 1996ம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு மொத்தமாக சுமார் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான 4வது வழக்கில் ஜாமீன் கோரி லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து 3 வருடங்களுக்கு பிறகு லாலு, பீகாரிலுள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொண்டர்களுடன் பேசினார்.
இந்த உற்சாகம் குறைவதற்குள், இன்னொரு நல்ல செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. லஞ்சம் பெற்ற வழக்கு ஒன்றை ஆதாரம் இல்லாததால் கைவிட்டுள்ளது சிபிஐ. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி, மகள்கள் சந்தா மற்றும் ராகிணி ஆகியோர், ஏபி எக்ஸ்போர்ட் என்ற கம்பெனியை, 2011ல் ரூ.4 லட்சத்திற்கு துவங்கியதாகவும், இது போலி கம்பெனி எனவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த கம்பெனி, 2007ம் ஆண்டு, நியூ பிரண்ட்ஸ் காலனியில் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியுள்ளது.
இந்த 5 கோடியை டிஎல்எப் நிறுவனம், கொடுத்ததாகவும், டெல்லி ரயில் நிலையம் மற்றும் பந்த்ரா ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள லாலு அனுமதியை பெற இவ்வாறு லஞ்சம் தரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 2018ம் ஆண்டு முதல் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க துவங்கியது. ஆனால், போதிய ஆதாரம் இல்லை என்பதால், முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொள்வதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
Discussion about this post