இந்தியாவில் 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட, மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே அதாவது 1 புள்ளி 8 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். அதேபோல், கடந்த 15 நாட்களாக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், 8 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, பீகார், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும், கடந்த 2 வாரங்களில் இந்தியாவில் 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post