கேதார்நாத் கோயில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுவாமிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் முதல் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்கள் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்கள் பனி காலத்தில் 6 மாதங்கள் மூடப்பட்டு கோடை காலத்தில் மீண்டும் திறக்கப்படும். அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் கடந்த வாரம் திறக்கப்பட்டன.
புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று அதிகாலை 5 மணிக்கு வேத கோஷங்கள், மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. குறைந்த அளவிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. கேதார்நாத் கோயிலில் உள்ள சுவாமி கேதாரீஸ்வரருக்கு பிரதமர்மோடியின் சார்பில் முதல் ருத்ராபிஷேக பூஜை நடத்தப்பட்டது.இதை உத்தராகண்ட் மாநில தகவல்மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில முதல்வர் திரத் சிங் ராவத் தனதுட்விட்டர் பதிவில், ”மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க கேதாரீஸ்வரரை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, மற்றொரு புகழ்பெற்ற கோயிலான பத்ரிநாத் கோயில் 18-ம் தேதி (இன்று) அதிகாலை திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நேற்று செய்யப்பட்டன. உத்தராகண்ட்டில் கரோனா பரவல் காரணாமாக இந்த ஆண்டு ‘சார்தாம்’ யாத்திரை தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post