கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் தனது வீட்டை படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா மருத்துவமனையாக மாற்றியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல்தான் கர்நாடகாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்து கொடுக்கும் நோக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஹவேரி மாவட்டத்தின் ஷிகாவ்ன் நகரில் உள்ள தனது வீட்டை 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையமாக மாற்றியுள்ளார்.
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவையும் அமைச்சர் நியமித்துள்ளார்.
தற்போது அமைச்சர் தனது குடும்பத்தினருடன் ஹுப்ளியில் வசித்து வருகிறார்.
அவர் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷிகான் நகரில் இருக்கும் இந்த வீட்டிற்கு எப்போதெல்லாம் தொகுதிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் பயன்படுத்தி வந்துள்ளார்.
பொதுமக்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் ஆம்புலன்ஸிலேயே இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பெரிதளவு உயிர் சேதத்தை நம்மால் தடுக்க முடியும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. கர்நாடகாவில் உள்துறை அமைச்சர் தனது வீட்டை கொரோனா வார்டாக மாற்றிய சம்பவம் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
Discussion about this post