நாடு முழுவதும் 5 மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றன. இதில், நேற்று (மே 2) வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க கணிசமான ஓட்டுகளை பெற்று, சில இடங்களில் வென்றுள்ளது. மற்ற இடங்களில் அக்கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக அசாம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதேபோல், கர்நாடகா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 13 சட்டசபை இடைத்தேர்தல்களும், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு லோக்சபா இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. இதில், பா.ஜ.க கட்சி மிகுதியான அளவிற்கு தனது வளர்ச்சியை அதிகரித்துள்ளது. அசாமில் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்தது.
மேற்குவங்கத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க தற்போது 76 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜியையே பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரி தோற்கடித்தது மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் கோலோச்சி இருந்த நிலையில், மம்தா ஆட்சிக்கு பிறகு சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், பா.ஜ.கவின் தற்போதைய வெற்றியால் அக்கட்சிகளை அறவே நீக்கிவிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டசபைக்குள் நுழைய முடியாமல் இருந்த பா.ஜ.க நேற்றைய தேர்தல் முடிவுகளில் வரலாறு படைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க அதில் 4 இடங்களில் வெற்றிப்பெற்றதுடன், தனது ஓட்டு சதவீதத்தையும் உயர்த்தியுள்ளது. கேரளாவில் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தனது கட்சியின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. அதாவது, பா.ஜ.க ஓட்டு சதவீதம் 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.,வின் கையே ஓங்கியிருந்தது. 10 மாநிலங்களில் மொத்தம் நடைபெற்ற 13 சட்டசபை இடைத்தேர்தல்களில் கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 5 இடங்களில் பா.ஜ., வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல், கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றியடைந்தது. இந்த வெற்றி எண்ணிக்கைகள் எல்லாம் பா.ஜ.கவின் வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post