நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்
கொரோனா அதிகரிப்பால் நாடு முழுவதும் மினி ஊரடங்கு போன்று கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து கோரத்தாண்டவமாடி வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 3,50,000-க்கும் மேல் கடந்து சென்று விட்டது. தினசரி உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது . தினசரி உயிரிழப்பு 3,000-ஐ கடந்து செல்கிறது. கொரோனவை தடுக்க தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மத்திய அமைச்சரவை கூட்டம்
நாட்டில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை சமாளித்து வருகிறது. மருத்துவமனையில் இடம் இல்லாததால் கொரோனா நோயாளிகள் சாலையில் படுத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது.
மினி ஊரடங்கு அமல்?
மேலும் நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மினி ஊரடங்கு போன்று கொண்டு வரலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. எனவே இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Discussion about this post