பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ததுகூடத் தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரான மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று (மார்ச் 16) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
”நீர் மேலாண்மையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.14 ஆயிரம் கோடிக்கு காவிரி- தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விராலிமலையில் ஐடிசி பிஸ்கெட் தொழில்சாலை மூலம் 3,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 மினி கிளினிக் உட்பட தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கிளினிக்குகளுக்குத் தரமான கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும்.
தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து 6 பேர்தான் எம்பிபிஎஸ் படிக்க முடிந்தது. நானும் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் விதமாக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டு யோசனை வந்தது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 435 பேர் எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு கூடுதலாகத் தொடங்கப்பட உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 1,650 ஆக அதிகரிக்கப்படும். இதில் இருந்து கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடம் உட்பட மொத்தம் 600 பேர் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசுப் பள்ளி மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.
தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகத் தொகை இழப்பீடாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாகக் கடன் ரத்து என்பதைத் தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சி வெளியிடும். ஆனால், தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை ரத்து செய்தது அதிமுக அரசுதான். ஆனால், இதுதெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதவிர, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் பெற்ற சுயஉதவிக் குழுக் கடன், 6 பவுன் வரையிலான நகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளோம்.
ஏப்.1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படும். அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், வாஷிங் மெஷின் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500, கல்விக் கடன் ரத்து எனப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கரோனா எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு குடும்பத்தோடு அனைவரும் இலவச கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துத் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்கிறார்.
Discussion about this post