வங்கி என்பது ஒரு நிதி நிறுவனம். பணத்தினை பெற்று, கொடுப்பது இதன் வேலை. வங்கிகள் கட்டாயம் ரிசர்வ் வங்கியின் அனுமதியினை பெற்றிருக்க வேண்டும்.
அதுவும் இந்தியாவில் யார் எப்போது வேண்டுமானாலும் வங்கிகளை தொடங்கி விட முடியாது. வங்கி தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்த பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
அதிலும் 1990களுக்கு பிறகு குறைந்த அளவு எண்ணிக்கையிலான வங்கிகள் தொடங்க மட்டுமே, ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. கடந்த 2004ல் கோடக் மகேந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி தொடங்க அனுமதிப்பட்டன. அதன் பின்னர் 2014ல் 20க்கும் மேற்பட்ட வங்கிகள் தொடங்க விண்ணப்பித்த நிலையில், சில வங்கிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
வங்கி தொடங்க விதிமுறைகள்
அதெல்லாம் சரி ஒரு வங்கி தொடங்க என்னென்ன விதி முறைகள்? பெரும் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் வங்கிகளில் 10% பங்குகளை வைத்திருக்கலாம். ஆனால் இயக்குனர் குழுவில் இடம் கிடையாது. மேலும் குறிப்பாக 5000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் கூட வங்கி தொடங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த குழுமத்தில் உள்ள வங்கி அல்லாத நிறுவனத்தின் பங்கு 40% சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி 40% மேல் இருந்தால் அவைகள் விண்ணப்பிக்க முடியாது இப்படி பல கட்டுப்பாடுகள் உண்டு.
வங்கித் துறையில் அனுபவம்
மேலும் 10 வருடங்களுக்கு மேல் வங்கி அனுபவம் இருக்கும் இந்தியர்கள் வங்கி தொடங்க அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் ரூ.500 கோடி முதலீடு இருக்க வேண்டும். வங்கித்துறையில் தற்போதைய அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு வரம்பு 74 சதவீதம். இதில் 25 சதவீத வங்கிக்கிளைகள் கிராமப்புற பகுதியில் நிச்சயம் தொடங்கியாக வேண்டும். வங்கி தனது செயல்பாட்டை தொடங்கிய ஆறு வருடங்களுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும். வங்கியின் இயக்குநர் குழுவில் அதிகபட்ச தனிப்பட்ட இயக்குநர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் உள்ளது.
இது வங்கியல்ல
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ பேங்க்கை வங்கியாகவே கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியில், சென்னை வியாசார்பாடியை சேர்ந்த பர்மா அகதி கணேசன் என்பவர் கடன் பெற்றிருந்தார். கடனை முறையாக செலுத்தாததையடுத்து கணேசனுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த ரெப்கோ வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நோட்டீசை எதிர்த்து கணேசன் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி சஞ்விவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கிக்காக அங்கீகாரம் பெற ரிசர்வ் வங்கியிடம் ரெப்கோ வங்கி கொடுத்த மனு மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உரிமம் பெற்ற வங்கிகளை போல ரெப்கோ வங்கி செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால், ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ரெப்கோ வங்கி வரலாறு
ரெப்கோ வங்கி 19 நவம்பர் 1969ல் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு வங்கியாகும். இது தென்னிந்தியாவில் குறிப்பாக ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சேவையை செய்து வருகின்றது. இவ்வங்கியின் மூலதனத்தில் இந்திய அரசு 73.33%மும், இதே repatriates 21.28%மும், தமிழக அரசு 2.91%மும், ஆந்திர அரசு 1.73%மும், கேரளா 0.59%, கர்நாடகா 0.17%மும் கொண்டுள்ளன.
வங்கி என்றழைக்க அனுமதி
ரெப்கோ வங்கி FFR Division கீழ் உள்ளது. இது உள்துறை அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வங்கி பல மாநிலங்களின் கூட்டு சங்கமமாகும். இது சொசைட்டியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் கீழ் உள்ளது. Reserve Bank of India under section 7(1) of Banking Regulation Act, 1949இன் பிரிவின் இந்த நிறுவனம், வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இவ்வங்கி ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படவில்லை.
Discussion about this post