வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கும் என்று அந்த தலைவர்கள் பல மாதங்களாகவே சொல்லிவந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க வுடன் தொகுதி உடன்பாடு செய்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சுர்ஜித் வாலே, உம்மன்சாண்டி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டவர்கள் தி.மு.க – வுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் எட்டு தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றிபெற்றது. இதனால் தி.மு.க தரப்பு இந்த முறை கூட்டணிக்கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்கும் திட்டத்தில் இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் 54 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து தங்களுக்கு கடந்த முறை கொடுத்த எண்ணிக்கையில் இந்த முறையும் சீட் ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பதினைந்து தொகுதி முதல் இருபது தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கமுடியும் என்பதை தி.மு.க தெளிவுப்படுத்திவிட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம்
இந்நிலையில் ராகுலிடம் இந்த தகவல் சொல்லப்பட்டதும், நாற்பதுக்கு குறைவாக நாம் வாங்கினால் நமது இமேஜ் பாதிக்கபடும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் “இந்த முறை தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலையில் உள்ளது. அ.தி.மு.கவிற்கு எதிரான அலையும் இருப்பதால், குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் முழு வெற்றியை நம்மால் பெற முடியும்” என்று காரணம் கற்பித்துள்ளார்கள். இதனால் வேறு வழியில்லாத ராகுல் முப்பது தொகுதிகள் வரை கேட்டு பெறுங்கள் என்று சொல்லியுள்ளார். இந்த தகவல் தி.மு.க தரப்புக்கு சொல்லப்பட்டது.
ஆனால் அதற்கும் தி.மு.க இறங்கி வரவில்லை. “22 தொகுதி முதல் 24 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கமுடியும். கடந்த முறை நீங்கள் வாங்கிய தொகுதிகளில் பெரும்பாலனவற்றில் அ.தி.மு.க அதிக வாக்கு வித்தியாசசத்தில் வெற்றி பெற்றதை மறந்துவிடாதீர்கள்” என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள். ஆனால்,“ இந்த முறை நாங்கள் வெற்றி பெறும் தொகுதிகளை மட்டுமே பட்டியலில் குறிப்பிட்டுள்ளோம்” என்று காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியும், தி.மு.க 24 என்ற எண்ணிக்கையிலிருந்து இறங்கிவரவில்லை. இதனால் காங்கிரஸ் – தி.மு.க தொகுதி பங்கீடு இதுவரை முடியாமல் இழுபறியாகிக்கொண்டே இருக்கிறது.
காங்கிரஸ் – தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
இந்நிலையில் தி.மு.க கூட்டணியை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் கலந்துக்கொண்டார். அவர் பேசும் போது, “நமக்கான இடங்களை உறுதியாக கேட்டுப்பெறுவோம். ஆனால் கடந்த முறை போன்று இந்த முறை தி.மு.க தொகுதிகளை விட்டு தர மறுக்கிறது” என்று சூசகமாக சொல்லியிருக்கிறார். கே.எஸ்.அழகிரியின் பேச்சில் ” நாம் தொடர்ந்து தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதியை கொடுத்தார்கள். 2016- ல் அதை 40 ஆக குறைத்தார்கள். இப்போது அதிலும் இருபதை குறைத்து கொடுக்க தி.மு.க முடிவெடுத்துள்ளது. நமது கட்சிக்கான இடங்களை தொடர்ந்து குறைத்து வருகிறார்கள்.ஆனால் 15 ஆண்டுகளாக உள்ள கூட்டணி இது என்பதால் நாமும் பொறுத்துப்போக வேண்டியுள்ளது. கொடுக்கும் இடங்களில் நாம் சிறப்பாக வேலை செய்வோம்” என்று பேசியிருக்கிறார்.
கே.எஸ்.அழகிரி பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “தி.மு.க கூட்டணியே வேண்டாம்” என்று சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அதை அழகிரி காதில் போட்டுக்கொள்ளவில்லை. தி.மு.க தரப்புடன் நாளை தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் மூடுக்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது என்கிறார்கள். 24 தொகுதி முதல் 27 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தரப்பு ஒதுக்க உள்ளதாம். அதிலும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற எட்டு தொகுதிகளை தவிர்த்து பிற தொகுதிகள், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் ஐந்தாயிரத்திற்கும் குறைவான வாக்குகளில் தோற்ற தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும்” என்று தி.மு.க டிமாண்ட் வைத்துள்ளது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாகும் என்கிறார்கள். ஐந்தாயிரத்திற்கு குறைவான வாக்குகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை பத்திற்கும் குறைவாம். இதனால் சீட் எண்ணிக்கையை தி.மு.க மேலும் குறைக்கக் கூடும் என்று அச்சப்படுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள்.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
சீட் ஒதுக்கீடு முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களின் நேர்காணலும் 6-ம் தேதி நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சி கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள் நம்மிடம் பேசும் போது ” தி.மு.க இவ்வளவு சீட் குறைத்துக்கொடுக்கிறது என்று தலைவரே சொல்கிறார். பிறகு எதற்கு அந்த கூட்டணியில் இருக்கவேண்டும். இருபது இருபது தொகுதியாக ஒவ்வொருமுறையும் குறைத்து வந்தால் அடுத்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் கொடுப்பார்கள். அகில இந்திய அளவிலேயே காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்தில் உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களும் தங்கள் சுயநலத்திற்காக கட்சியை அடகு வைக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், இந்த தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாரிசுகளைச் சட்டமன்றத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறார்கள். பத்து தொகுதிகளை தி.மு.க அளித்தால் கூட வாங்கிகொண்டு தங்கள் வாரிசுகளை மட்டும் போட்டியிட வைத்துவிடுவார்கள் . கட்சிக்கு பலகாலமாக உழைத்தவர்களை பற்றி எண்ணம் அவர்களிடம் துளியும் இல்லை. `ஒன்று வாரிசுக்கு சீட் கேட்கிறார்கள், அல்லது காசுக்கு சீட்டை விற்கிறார்கள்’ இதுதான் இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலை. இப்படி இருந்தால் தமிழகத்தில் இந்த கட்சி எப்படி வளரும்” என்கிறார்கள் கதர்சட்டைத் தொண்டர்கள்.
“தமிழகத்தை பல ஆண்டுகள் ஆண்ட கட்சி கடந்த ஐம்பதாண்டுகளில் கட்டெறும்பு போல தேய்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டதாலேயே காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வருகிறது” என்று புலம்பலும் கட்சிக்குள் பலமாக இருக்கிறது. இந்த முறை தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறி தனித்துக்கூட நிற்கலாம். அப்போதவது நமது பலம் நமக்கும் புரியும், பிற கட்சிகளுக்கும் புரியும். அல்லது கமலுடன் அணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடலாம் என்கிற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பலமாக கேட்கிறது.
தி.மு.க தரப்பில் கேட்டால் “அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் ஏற்கனவே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட்களை புக் செய்துவிட்டார்கள். அது எங்களுக்கு தெரிந்துதான் எண்ணிக்கை குறைத்துவிட்டோம். அதோடு பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட காங்கிரஸ் கட்சியின் எம்்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது. நாளை தமிழகத்திலும் அது நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்” என்று கேட்கிறார்கள்.
இதற்கு பதில் சொல்லவேண்டிய காங்கிரஸ் தலைமை அமைதியாக இருப்பது ஏன்? என்பது புரியவில்லை.
Discussion about this post