அதிமுக வுடன் தொகுதி பங்கீடு விரைவில் முடிந்து விடும். இரட்டை இலக்கத்தில் பாஜக போட்டியிடும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக கூறியுள்ளதை வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது என்றும் எல்.முருகன் பாராட்டு தெரிவித்தார்.
இரட்டை இலக்கத்தில் பாஜக போட்டியிடும்
அதிமுக பாமாவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொகுதி பங்கீட்டு பேச்சு விரைவில் முடிந்து பாஜக இரட்டை இலக்கத்தில் போட்டியிடும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
அமித்ஷா வருகிறார்
தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:- நாகர்கோவிலில் நாளை மறுநாள் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது, அதிமுக உடனான எங்களுடைய கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டுள்ளது. பாஜக இரட்டை இலக்கத்தில் போட்டியிடும்.
மக்கள் எண்ணம் இதுதான்
மக்கள் மீதும், தேசத்தின் வளர்ச்சியிலும் பாஜக அதிக அக்கறை கொண்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து சசிகலா அரசியல் விட்டு விலகுவதாக கூறியுள்ளதை வரவேற்கிறோம். மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராக துரோகம் செய்து வரும் திமுக, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது திமுக. எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது.
ராகுல் காந்தி விதிகளை மீறிவிட்டார்
தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளது. தற்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்துள்ளது. குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி உள்ளது.. விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. இதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதனை எடுத்துக்கூறி தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். ராகுல் காந்தி கல்லூரி ஒன்றில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று எல்.முருகன் தெரிவித்தார்.
Discussion about this post