எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கிளைச் செயலாளர், மாவட்ட கழகச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் எனப் பல்வேறு பதவிகள் வகித்த எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் பிறந்தவர் முதல்வர் பழனிசாமி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பிஎஸ்சி வரை படித்துள்ள பழனிசாமி 1972ஆம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் அதிமுகவில் பல பொறுப்புகளை வகித்த அவர் எடப்பாடி தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். இப்போது 66வயதாகும் பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்ல நேர்ந்ததும் தமிழக முதல்வராக பதவியேற்றார் பழனிசாமி. நான்காண்டுகாலம் வெற்றிகரமாக முதல்வர் பதவியை நிறைவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கிறார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இபிஎஸ் என்று ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
எடப்பாடி தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சாராகியிருந்தாலும் இம்முறை முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி களமிறங்குவதால் எடப்பாடி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. எடப்பாடி கே.பழனிச்சாமியின் மனைவி பெயர் ராதா. இந்த தம்பதிக்கு மிதுன் குமார் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் திருமணம் ஆகி மனைவியுடன் வசித்து வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி பயோடேட்டா:
1954ஆம் ஆண்டு. கோவை மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கருப்பக் கவுண்டர் – தவசியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு வெல்ல மூட்டை வியாபாரம் பார்த்து வந்தார்.
எம்.ஜி.ஆரின் மீதிருந்த பேரார்வம், எம்.ஜி.ஆரின் அரசியலின் மீதும் திரும்பியது. சரியான சமயத்தில் அப்போது அதிமுகவில் செல்வாக்குடன் இருந்த செங்கோட்டையனைச் சந்தித்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார். செங்கோட்டையன் ஆசியால் கோணேரிபட்டி கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரு அணியாக அ.தி.மு.க. செயல்பட்டது.
அப்போது ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி தி.மு.க. வேட்பாளர் எம்.பழனிச்சாமியை தோற்கடித்து முதல் முறையாக எடப்பாடி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர், சேலம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார், எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் நேரடி விசுவாசத்துக்குரிய தொண்டர்களில் ஒருவர் என்பதால் இவருக்கு தேர்தலில் போட்டியிட அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. 1991 முதல் 1996 வரை எடப்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்தார். 1998ஆம் ஆண்டு திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் 2011ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதிமுகவினரின் புகார்கள், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் உள்ளிட்டோரை கொண்ட ஐவர் அணியை ஜெயலலிதா அமைத்தார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க அமைப்பாக பார்க்கப்பட்ட இந்த ஐவர் அணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் இடம் கிடைத்தது. முதல்வருக்கு அடுத்த இடத்தில் இவர்கள் அதிகார மையமாக வலம் வந்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவியேற்றார். ஜெயலலிதாவின் மரணம் சசிகலாவிற்கு கிடைத்த சிறை தண்டனை எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது.
2017, பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தமிழத்தின் 13ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நான்காண்டுகள் முதல்வராக வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு உடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து கட்சிக்காரர்களை அரவணைத்து கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்து சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார், எடப்பாடி பழனிசாமி.
Discussion about this post