இன்று காலை வரை கொரோனா தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்கும் கோவின் போர்ட்டலில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நேற்று மட்டும் 34 லட்சம் பேர்பதிவுசெய்துள்ளார்கள். கடைசியாக நான் இன்று காலையில் சோதனை செய்தபோது, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தங்களை போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், உண்மையான பதிவு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சர் கூறினார். “ஒரு எண்ணிலிருந்து, ஒரு நபர் நான்கு பயனாளிகளைப் பதிவு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.
நாங்கள் அதை இரண்டாகக் குறைத்தாலும், உண்மையான பதிவின் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியிருக்கலாம்.” என்று அவர் யூகிப்பதாகத் தெரிவித்தார்.
டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் இன்ஸ்டிடியூட்டில் தனக்கு தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர் ஊடகங்களுடன் உரையாடிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் தனது மனைவியுடன் வந்து இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் மற்றும் அவரது மனைவி என இருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தனியார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தனர். அங்கு அவர்கள் பெற்ற தடுப்பூசிக்கு தலா ரூ 250 செலுத்தினர். தடுப்பூசியின் செலவுகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நபர் ஒரு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
“தடுப்பூசியை வாங்கக்கூடியவர்கள், வீட்டிற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து அதைப் பெற வேண்டும் என்று நான் அனைவரிடமும் முறையிட விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.
Discussion about this post