மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை (பிப்26) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணையின் இடதுகரையில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் தொடங்கி வைத்தார்.
கடந்த ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது அந்த நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
பின்னர் இந்தத் திட்டத்திற்கு ரூ.565 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது அணையின் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பின்னர் அங்கிருந்து 940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம் .காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் திப்பம்பட்டி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் ரூ. 62 கோடியே 63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு வைத்தார்.
நீரேற்று திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்த திட்டத்திற்காக திப்பம்பட்டியில் இருந்து எம். காளிப்பட்டி ஏரி வரை 12 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது.
திப்பம்பட்டியில் மிக பிரம்மாண்ட நீரேற்று நிலையங்களும் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரேகரன், மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதாசரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post