தமிழகத்தில் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்களிடையே எழுச்சி உரையாற்றுவது மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் குறையை தீர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறார்.
ஏற்கனவே தமிழக விவசாயிகளின் நலன் கருதி 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் முதலமைச்சர் எடப்பாடியார், விவசாயிகள் உச்சகட்ட மகிழ்ச்சியடையும் வகையில் மற்றொரு தூளான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும். ரூபாய் 20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும். விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும்.
நெல்லையிலும் விவசாயிகளுக்குப் பிரம்மாண்ட சந்தையைக் கட்ட அரசு பரிசீலிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி தனி மாவட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பணி சிறக்க அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பாடுபடும். மேலும் தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்காலம். தமிழகத்தில் யாருக்கும் வீடு இல்லை என்ற நிலையை உருவாக்கக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்” என்றும் உறுதியளித்தார்
Discussion about this post