பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி, சமீபத்தில் திருமணம் செய்தார்.இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெண் மற்றும் அவரது கணவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, பெண் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், தங்கள் விருப்பப்படி இணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்கின்றனர். இதன் வாயிலாக, ஜாதி, மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சமூகத்தில், தற்போது மிகப்பெரிய மாற்றம் உருவாக துவங்கியுள்ளது. கலப்பு திருமணங்கள் அதிகரிப்பதன் வாயிலாக, ஜாதி, மதங்களுக்கு இடையிலான பதற்றங்கள் வெகுவாக குறையும்.
கலப்பு திருமணங்கள் செய்யும் இளைய சமூகத்தினருக்கு, மூத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. அதுபோன்ற நேரங்களில், நீதிமன்றம் தலையிட்டு, இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய நிலை உள்ளது.இது போன்ற புகார்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, போலீசாருக்கு வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Discussion about this post