அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல், அங்கு தங்கியிருந்து பணியாற்ற, எச் – 1பி விசா வழங்கப்படுகின்றன.ஆண்டுக்கு, 85 ஆயிரம்எச் – 1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது. இந்தியர்களும், சீனர்களும் தான், அதிக அளவில் இந்த விசாவைப் பெற்று, அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் பதவிகாலம் முடிவடையும் போது, இந்த நடைமுறையை மாற்றினார்.குலுக்கல் முறையை அகற்றி, விண்ணப்பிப்போருக்கு, தகுதி அடிப்படையில், எச் – 1பி விசா வழங்க உத்தரவிட்டார்.
புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின், இந்த ஆண்டு இறுதி வரை, மீண்டும் குலுக்கல் முறையையே பின்பற்றப்படும் என, உத்தரவிட்டார்.வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடியேற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி, இணக்கமான சூழலை உருவாக்க, அதிபர் ஜோ பைடன் உறுதியாக உள்ளார்’ என்றார்.’டிரம்ப் விடுவிக்கப்பட கூடாது’அமெரிக்க பார்லி.,யான கேப்பிடோல் கட்டடத்தில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், கடந்த மாதம் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், ஐவர் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது, ஆளும் ஜனநாயக கட்சியினர், கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர்.
டிரம்ப் மீதான கண்டன தீர்மான விசாரணை, அமெரிக்க செனட்டில், 10ம் தேதி துவங்கியது. அப்போது, ஜனநாயக கட்சி சார்பில் கண்டன தீர்மானம் கொண்டு வந்த நிர்வாகிகள், கலவரம் தொடர்பான, ‘வீடியோ’க்களை செனட்டில் திரையிட்டனர்.’டிரம்ப் மீது ஏற்கனவே கொண்டு வந்த கண்டன தீர்மானத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை போல, இம்முறையும் விடுவிக்க உதவாதீர்கள்’ என, குடியரசு கட்சி செனட்டர்களிடம், அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.