லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில் இந்தியாவை எங்கு அழைத்து செல்ல விரும்புகிறோம் என்ற புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை முன்னெடுத்து செல்வதை நாம் யோசிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியுள்ளது
உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது. ஒரு லட்சியத்தை நோக்கி பல்வேறு சவால்களை சமாளித்து இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டது. இந்தியாவை பற்றி பேசும்போது, விவேகானந்தர் கூறியது நினைவுக்கு வரும். கொரோனா காலத்தில் நம்மை நாமே காத்து கொண்டதுடன், உலக நாடுகளுக்கும் உதவி செய்தோம். கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்தது. உலக நாடுகள் கூட அதனிடம் மண்டியிட்டன.
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு விஷயங்களை செய்துள்ளோம். கடவுளின் அருளால் தான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டோம் என காங்.,சின் மணீஷ் திவாரி கூறுகிறார். ஆமாம் உண்மையில் கடவுளின் அருளால் தான் பாதுகாப்பாக இருக்கிறோம். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியபோதும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கடவுளாக வந்ததால் நாம் பாதுகாப்பாக இருந்தோம். அவர்கள் கடவுளின் வடிவமாக சேவையாற்றினர்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகவும் வித்தியாசமாக மாறி வருகிறது. அமைதியின் பாதையில் செல்ல உலக நாடுகள் உறுதிப்பூண்டுள்ளன. கொரோனாவிற்கு பிறகு புதிய உலகம் உருவாகியுள்ளது. இந்தியாவில் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது. 75 கோடி இந்தியர்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி அளிப்பதற்காக, ஜன்தன் யோஜனா, ஆதார் பயன்படுத்தப்பட்டது. கொள்கை மற்றும் திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மீட்டுள்ளோம். மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பலருக்கு உதவி செய்துள்ளன.
வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களது நோக்கம் நேர்மையானது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடியது. இந்த சட்டத்திற்கு வர்ணம் பூசி காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. விவசாயிகளுக்கு உண்மை தெரிந்துவிடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. விவசாயிகளின் உணர்வுகளை மதிக்கிறோம். எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றனர். உங்களுடைய உரிமைகள் ஏதேனும் பறிப்போகிறதோ என்று ஏதாவது ஒரு விவசாயியிடம் கேளுங்கள். இந்த சட்டங்களை தடம்புரள செய்ய காங்., திட்டமிடுகிறது. விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறோம். வேளாண் துறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பலனை அளிக்க துவங்கியுள்ளன.
வேளாண் சட்டங்களின் நோக்கம், முக்கிய அம்சங்கள் பற்றி விவாதித்தால் நன்றாக இருந்திருக்கும். முறையாக விவாதம் நடத்தாமல், வேறு விஷயங்கள் பற்றி விவாதம் நடத்துகின்றன. குறைந்தபட்ச ஆதார விலை பாதிக்கப்படவில்லை. விளைபொருட்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூடப்படவில்லை. விவசாயிகளுக்கு உண்மை தெரிந்து விடுமோ என எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. தேவையற்ற பயத்தை ஏற்படுத்தி நாட்டில் பிரச்னைகளை உருவாக்க பல சக்திகள் முயற்சித்து வருகின்றன. உரிமை பறிக்கப்படுகிறதா என விவசாயிகளிடம் கேட்க விரும்புகிறேன். ஆனால், ஒருவரும் பதிலளிக்க தயாராக இல்லை.
இந்த சட்டங்களை எதிர்ப்பதற்கு உரிய காரணம் யாரிடமும் இல்லை. இதனால், ஜனநாயகம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கவலைப்படுகின்றனர். புது சட்டங்கள் விவசாய பொருள் விற்பனை செய்யும் மண்டிக்களை பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், சில கட்சிகள் வெற்று கோஷம் போடுகின்றன. நாடு வளர்ச்சி பெறுவதற்கு இந்த சட்டங்கள் தேவைப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகவே உள்ளது.
இந்தியாவின் பழமையான கட்சி பிளவுபட்டுள்ளது.காங்கிரசின் நிலைப்பாடு, ராஜ்யசபாவில் இருந்து லோக்சபாவில் மாறுபட்டுள்ளது. மக்கள் கேட்காமலேயே அவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் கேட்காமல், ஆயுஸ்மான் பாரத் திட்டம், ஏழைகளின் வீடுகளில் கழிப்பறை ஆகியவை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்கு அதிகாரம் கிடைக்க விருமபுகிறோம். மாற்றங்கள் ஏற்பட, இளைஞர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post