இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 555 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது. காலையில் இங்கிலாந்து அணி ‘டிக்ளேர்’ செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடர்ந்தது. ஆடுகளத்தில் திருப்பம் எதுவும் இல்லாத நிலையில் 5.2 ஓவர் வீசப்பட்ட பின் இந்திய தரப்பில் புதிய பந்து எடுக்கப்பட்டது. இதன் முதல் பந்தில் டாம் பெசை (34) பும்ரா போல்டாக்கினார். அஷ்வின் பந்தில் வந்த, ‘ஸ்டம்பிங்’ வாய்ப்பை ரிஷாப் பன்ட் கோட்டை விட, லீச் தப்பினார். தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்ட அஷ்வின் ஆண்டர்சனை (1) போல்டாக்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.