கொரோனா சூழலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆத்மநிர்பார் எனும் தன்னிறைவு இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதனை பல்வேறு அமைச்சகங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டி.ஆர்.டி.ஓ., போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்கி ஊக்குவிக்கின்றன. நேற்று (பிப்., 4) ‘ஏரோ இந்தியா’ விமானக் கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “ 2024ம் ஆண்டுக்குள், 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்நிலையில் விமான உதிரிபாகங்கள் கொள்முதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை பல வெளிநாட்டு போர் விமானங்களை இந்திய விமானப் படை இயக்குகிறது. உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்தவும், பாதுகாப்பு மற்றும் இந்திய வான்வெளி நிறுவனங்களில் அவர்களின் பங்களிப்பு பெரியளவிற்கு இருப்பதற்கும் இந்திய விமானப் படை உத்வேகமளிக்கிறது. குறிப்பாக எம்.எஸ்.எம்.இ.,க்களின் பங்களிப்புக்கு அதிக கவனம் செலுத்துகிறது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கான வளங்களை ஏற்கனவே விமானப் படை அடையாளம் கண்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள போர் விமானதள பழுதுபார்க்கும் பணிமனைகள் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக எம்.எஸ்.எம்.இ.,க்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதிரிபாகங்கள் தயாரிப்பு மட்டுமின்று பழுதுபார்ப்பதற்கான வசதிகளையும் இந்தியாவிற்குள்ளேயே அமைப்பது இந்திய விமானப் படையின் நோக்கம். இதன் மூலம் நேரமும் நிதியும் பெருமளவு மிச்சமாகும். என கூறியுள்ளனர்.