இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் மட்டும் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். பும்ரா, கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார்.
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸும் டாம் சிப்லியும் இந்தியப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். இதனால் 23 ஓவர்கள் வரை விக்கெட் விழவில்லை. 33 ரன்கள் எடுத்திருந்த பர்ன்ஸ், அஸ்வின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று, ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டான் லாரன்ஸை எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் செய்தார் பும்ரா. இது இந்திய மண்ணில் பும்ரா எடுக்கும் முதல் டெஸ்ட்.
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. சிப்லி 26, ரூட் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிப்லியும் ரூட்டும் பிரமாதமாக விளையாடினார்கள். ஆடுகளம் எவ்வித பந்துவீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதால் இருவரும் அதை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதனால் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை விடவும் அஸ்வின் அதிக ஓவர்களை வீச வேண்டியிருந்தது. நிதானமாக விளையாடிய சிப்லி, 159 பந்துகளில் அரை சதத்தை எட்டினார்.
இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. சிப்லி 53, ரூட் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு 110 பந்துகளில் அரை சதம் அடித்தார் ஜோ ரூட். புஜாரா போல நிதானமான ஆட்டத்தைக் கையாண்டு ரன்களைச் சேர்த்தார் டாம் சிப்லி. குல்தீப் யாதவ் அணியில் இருந்திருந்தால் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என எண்ணும் வைக்கும் அளவுக்கு சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்கு எதிர்கொண்டார்கள். இதன்பிறகு 164 பந்துகளில் சதம் அடித்தார் ரூட்.
100-வது டெஸ்டில் விளையாடும் ரூட், சதமடித்ததோடு தொடர்ச்சியாக மூன்று டெஸ்டுகளில் சதமடித்துள்ளார். 100-வது டெஸ்டில் சதமடித்த 9-வது வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரின் முதல் நாளிலேயே இந்திய அணிக்கு சவாலாக விளங்கியுள்ளார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சிப்லி, முதல் நாளின் கடைசி ஓவரில் பும்ரா பந்துவீச்சில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 3-வது விக்கெட்டுக்கான 200 ரன்கள் கூட்டணி முடிவுக்கு வந்தது.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை இந்தியா சுலபமாக வீழ்த்தி விடும் என ரசிகர்கள் கனவு கண்டார்கள். ஆனால், முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி வீரர்கள் மன உறுதியுடன் விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி தந்துள்ளார்கள்.
Discussion about this post