இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே போல வழக்கமாக பட்ஜெட் தயார் செய்யும் பணி தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் அல்லா கிண்டும் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 2021 – 22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி பட்ஜெட் உரைகள் தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அல்வா கிண்டி விட்டால், பட்ஜெட் பணிகள் தொடங்கி விட்டதாக என்று அர்த்தம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், பட்ஜெட் தயாரிப்பு மற்றும் ஆவணங்களை அச்சிடும் பணி நார்த் ப்ளாக்கில் 10 நாட்களுக்கு நடைபெறும். இதில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போன் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு விதிக்கப்படும்.
பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் உரை வாசித்து முடித்த பின்னர்தான், நார்த் பிளாக்கிலிருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பட்ஜெட் ரகசியத்தை காக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பட்ஜெட் தயாரிப்பு பணியில் எந்த தடங்களும் வரக்கூடாது என்றும், தயாரிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களை கவுரவப்படுத்தும் நோக்கிலும், அல்வா கிண்டி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். நிதியமைச்சர் அல்வா கிண்டி பணியை தொடக்கி வைப்பார். கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போல பட்ஜெட் ஆவணங்களை அச்சிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் முறையை நிதியமைச்சகம் ரத்து செய்துள்ளது. காகிதமில்லாத முறையை பின்பற்ற உள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவணங்களை அச்சிடுவதற்காக நார்த் பிளாக்கில் பணியாளர்கள் குறைந்தது 10 நாட்கள் தங்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் முதன்முதலில் கிழக்கிந்திய கம்பெனிதான் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது. அப்போது இந்தியாவுக்கான நிதிப்பொறுப்பை கவனித்து வந்த ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1860ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இந்தியாவுக்கான பட்ஜெட் அறிக்கையை தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்க அனுப்பி வைத்தார். இதுவே இந்தியாவின் முதல் பட்ஜெட் ஆகும்.
சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் தாக்கல் செய்யப்பட்டதும் இடைக்கால பட்ஜெட்தான். அப்போது நிதியமைச்சராக இருந்த தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தான் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இவரை அடுத்து 1951-52ஆம் ஆண்டிலும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் இந்தியாவின் முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த டி.டி. தேஷ்முக் ஆவார்.
சுதந்திர இந்தியாவின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டி.டி.தேஷ்முக் தான். இதற்கு அடுத்தாக பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவும் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பிரதமரும் நேருதான். அப்போது பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக அவர் கவனித்து வந்ததால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post