வங்கதேசத்தில் வன்முறைகள் தலைவிரித்தாடுவதால், நாடு முழுவதும் உள்ள பல காவல் நிலையங்களில் ஆட்கள் இல்லை.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், ஒரு பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த ஜூலை மாதம் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி போராட்டம் தீவிரமடைந்தது. இதில், ஹசீனா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். எனினும், போராட்டக்காரர்களால் நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. ஹசீனா தனது சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதற்குப் பிறகும், நாட்டில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களில் 400 காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதில் 50 போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் காவலர்கள் தஞ்சம் புகுந்தனர்.
இதனால், நாட்டில் உள்ள பல காவல் நிலையங்களில் காவலர்களே இல்லை. டாக்கா ட்ரிப்யூன் படி, முன்பு ஆட்சி செய்த அவாமி லீக் அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த பல மூத்த அதிகாரிகளும் பதுங்கியிருக்கிறார்கள்.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வன்முறை கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பட்டா, ஜத்ரபாரி, வதாரா, அபதோர், மிர்பூர், உத்தரா கிழக்கு, முகமதுபூர், ஷா அலி மற்றும் பால்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவதில் சுதந்திரமாக பணி செய்ய விடாமல் தடுக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.