உக்ரைன் மற்றும் இந்தியா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
போலந்தில் இருந்து ரயிலில் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தப் போரில் நாங்கள் (இந்தியா) நடுநிலை வகிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் பக்கச்சார்பாகத்தான் இருக்கிறோம். இது அமைதியின் பக்கம். நாங்கள் புத்தரின் தேசத்தில் இருந்து வருகிறோம். போருக்கு இடமில்லை. உலகம் முழுவதற்கும் அமைதியின் செய்தியை வழங்கிய மகாத்மா காந்தியின் மண்ணிலிருந்து நாங்கள் வந்துள்ளோம்.
பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இந்த தீர்வைக் காண முடியும். எனவே நேரத்தை வீணாக்காமல் அதை நோக்கி பயணிக்க வேண்டும். எனவே இரு தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்த நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். அமைதியை நிலைநாட்ட உக்ரைனுக்கு அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இரு தலைவர்களும் தனித்தனியாகவும், உயர்மட்டக் குழுவுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து இரு தலைவர்களும் விரிவான விவாதங்களை நடத்தினர்.
பிரதமர் மோடி மற்றும் ஜெலென்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இந்தியா-உக்ரைன் வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, மருந்து, விவசாயம், கல்வி உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம், விவசாயம் மற்றும் உணவுத் துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறைத் துறையில் ஒத்துழைப்பு, உக்ரைனில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியாவின் மானிய உதவி மற்றும் 2024-28 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார ஒத்துழைப்பு ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
உக்ரைனுக்கு எனது வருகை வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா – உக்ரைன் நட்புறவை ஆழப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பெரிய தேசத்திற்கு வந்தேன். நான் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தினேன். அமைதி எப்போதும் நிலவ வேண்டும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. உக்ரைன் அரசாங்கம் மற்றும் மக்கள் தங்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
Discussion about this post